239. அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் கோயில்
இறைவன் தெய்வநாயகேஸ்வரர், அரம்பேஸ்வரர்
இறைவி கனககுஜாம்பிகை
தீர்த்தம் சந்திர தீர்த்தம்
தல விருட்சம் மல்லிகை
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருஇலம்பையங்கோட்டூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'எலுமியன்கோட்டூர்' என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்திலிருந்து பேரம்பாக்கம் செல்லும் பேருந்தில் சென்று நரசிங்கபுரம் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவு. சென்னை - அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Ilambaiyankottur Gopuramதேவகன்னியர்களான அரம்பையர்கள் வந்து வழிபட்டதால் 'அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் இத்தலம் 'அரம்பையங்கோட்டூர்' என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் 'இலம்பையங்கோட்டூர்' என்று மருவியது. சிவபெருமான் திரிபுராந்தகர்களை அழிக்க புறப்பட்ட போது தேவர்கள், சிவபெருமானை இத்தலத்தில் துதித்து வழிபட்டதால் இத்தலத்து மூலவர் 'தெய்வநாயகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'தெய்வநாயகேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'கனககுஜாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

Ilamiyankottur Amman Ilamiyankottur Moolavarகோஷ்டத்தில் நிருத்த விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், நடராஜர், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின்முத்திரையை அடியார்களுக்கு காண்பிப்பது போல் இல்லாமல், தமது இதயத்தில் வைத்திருப்பதுபோல் காட்சி தருவது சிறப்பு. கல்லால மரத்தின் அடியில் இடக்கரத்தில் ருத்ராட்ச மாலை, திரிசூலம் கொண்டு, வலது பாதம் மேல் நோக்கியும் இடது பாதம் முயலகன் மீதும் இருக்கும் நிலையில் யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.

பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் அரம்பையர் வழிபட்ட 'அரம்பேஸ்வரர்', லிங்க வடிவில் 16 பட்டைகளுடன் காட்சி அளிக்கின்றார்.

ஏப்ரல் மாதம் 2 முதல் 7 ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 5 முதல் 11 ஆம் தேதி வரையிலும் மூலவர் மீது சூரிய ஒளி படும் சூரிய பூஜை நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com